பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012

உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி!

சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் பழுதடைந்தவர்கள் பிறரிடம் இருந்து பெறும் உறுப்பால் இயல்பு நிலையை அடைய முடியும் என்பது இன்றைய மருத்துவத் துறையின் வரம். ஆனால் கொடையாளர் எல்லோரின் உறுப்பையும் தேவைப்படுவோரின் உடம்பு ஏற்காது என்பது இதில் உள்ள சங்கடம். இதற்குத் தீர்வு காணும் வகையில் ஸ்டெம் செல் ஊசி முறையை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 
 
இதன்மூலம் எந்த உறுப்பையும் எவரது உடம்பும் ஏற்கும்படி அவரது நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றலாம் என்கிறார்கள். உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் நோயாளிகள் சிலருக்கு இந்த முறையில் மருந்து செலுத்தப்பட்டது வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இப்போதைக்கு, மாற்று உறுப்புப் பொருத்திக்கொண்டவர்களுக்கு அதை அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்காத நிலையில், அதைச் சமாளிக்க வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடும் நிலைதான் உள்ளது.
அவ்வாறு சாப்பிடும் மருந்துகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அதாவது, மாற்று உறுப்பை உடம்பு ஒரு மாதிரி சகித்துக் கொண்டாலும் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தீவிரமான நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 
தங்களின் புதிய ஸ்டெம் செல் ஊசியால், இனிமேல் நோயாளிகள் மாற்று உறுப்பு எதிர்ப்பைச் சமாளிக்கும் மருந்திலிருந்து விடைபெறலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பர்க் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் லீவன்தால் இதுபற்றிக் கூறுகையில், ``தற்போது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் இந்த ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகள் உற்சாகம் தருவதாக உள்ளன. எதிர்காலத்தில் உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்'' என்கிறார். 

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

0 comments: